Wednesday 15 April 2020

அரவிந்த்


அரவிந்த்


கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகணுமா? வேற வழியே இல்லையா, நாம வேணும்னா ஒரு வாரம் டைம் குடுத்து பாக்கலாமா? என்று தன் காதுகளில் உள்ள ஆப்பிள் ஏர் பாட்டுக்கு மட்டும் கேட்குமாறு, பதட்டத்துடன் பேசிக்கொண்டு இருந்தான் அரவிந்த். (இந்த ஏர் பாட்டின் ஏற்பாட்டை பற்றி தெரியாதவர்கள் இவனை வேறு மாதிரி நினைக்க கூடும் !!) நெற்றியின் வியர்வை நிலத்தில் படும் அளவிற்கு பதட்டம் அரவிந்துக்கு. அங்கு காற்றில் இருக்கும் டெட்டால் மனம் கூட இவனை பார்த்து என்ன பிரச்சனை தம்பி என்று குசலம் விசாரிக்கும் அளவுக்கு இருந்தது அரவிந்துடைய நிலை. எனக்கு இது தான் பர்ஸ்ட் டைம், எல்லாம் முடிஞ்ச பிறகு ஜூஸ், ஹார்லிக்ஸ்-லாம் குடுப்பாங்க தானே என்று அலைபேசியின் எதிர்முனையில் இருப்பவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தான். பின்னால் இருந்து ஒரு குரல், “அரவிந்த் சார்என்றது.
திரும்பிப்பார்த்தால் அடர் நிற தோற்றத்துடன், சற்றே உருப்பெற்ற தொப்பையுடனும் , ஒரு வாரம் டை அடிக்காத நிலையை தலைமுடியைவிட மீசை சொல்லும் அளவுக்கு வயதான ஒரு நபர் புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தார். அவரது ஒயிட் & ஒயிட் சட்டை பேண்ட் "உஜாலா"-வை நினைவு படுத்தியது. மின்னல் அடிக்கும் வெண்மை கண்ணை பறிக்கும் முன், "சார் நாகராஜ் சார் தான் உங்கள பிக் பண்ண சொன்னாரு, அவரு ஆன் தி வே , அதுக்குள்ள நம்ம போலாம் வாங்க சார் " என்றார் அந்த Mr. ஒயிட்.
ஓ அப்படியா, ஒரு நிமிஷம் என்றபடி அரவிந்த், “பூமா நான் முடிச்சிட்டு உனக்கு கால் பண்றேன், பை பை., லவ் யு என அலைபேசி அழைப்பை துண்டித்து, தன் இரண்டு காதுகளில் இருந்தும் வெள்ளை நிற பஞ்சு போல் உள்ள ஒன்றை தைல டப்பா போல் உள்ள ஒன்றில் போட்டு பத்திரமாய் தன் பேண்ட் பையில் வைத்தான். "சாரி, போன்-ல பேசிட்டு இருந்தேன், ஆமா உங்க பேரு என்னனு சொன்னீங்க ? என்றான் அரவிந்த். "சார் நான் இன்னும் என் பேர சொல்லவே இல்லையே என்று அசட்டு சிரிப்பு சிரித்தார் Mr. ஒயிட் (சட்டையில் இருக்கும் வெண்மை பற்களில் இல்லாமல்). என் பேரு வசந்த், அது என்ன புது ஹெட் போனா சார் வெள்ளையா" என்று வினவினான் Mr. ஒயிட்டான வசந்த். ஆமாங்க இது ஆப்பிள் போன் லேட்டஸ்ட் ஹெட் போன், இத ஏர் பாடுனு சொல்லுவாங்கஎன்றான் அரவிந்த். என்ன பாட்டு சார்”, என்றான் அப்பாவியாய் வசந்த், “இட் ஐஸ் ஏர் பாட், வசந்த் என்று அரவிந்த் சொன்னதும், தமிழில் சொன்னால் புரியாதது இங்கிலீஷில் புரிந்தார் போல், “ஓ ஓகே ஓகே சார்என்றான் வசந்த்.
அவர்கள் நடந்து சென்ற அந்த நீண்ட லாபியில் அவன் கண்ணில் பட்டவை எல்லாம், வீல் சாரில் தள்ளி செல்லப்பட்ட வயது முதிர்ந்த அம்மாவும், இரண்டு கம்பௌண்டர்களும், ஸ்ட்ரெச்சரில் வைத்து க்ளுகோஸ் பாட்டிலுடன் தள்ளப்பட்டு அழைத்து செல்லப்பட்ட ஒரு தாத்தாவும் தான். ஒரு சுமாரான நர்ஸ் கூட அவன் கண்ணில் தென்படவே இல்லை. இதற்கிடையில் வசந்த், "நாகராஜ் சார் உங்க மாமாவா சார் என்றான்", அதற்க்கு அரவிந்த் ஆமாஎன்றான், இரத்தின சுருக்கமாக. இப்படி சுற்றிலும் நோயாளிகளை பார்த்த அரவிந்துக்கு என்னமோ கேன்சர் நோயாளிபோன்ற ஒரு பீல் வந்துவிட்டது, சற்றே தயக்கத்துடன், "நாம வேணும்னா மாமா வரவரைக்கும் வெயிட் பண்ணலாமா என்றான் அரவிந்த்.
சார் நாம பர்ஸ்ட் போயி ப்ரோசிஜர்-லாம் ஆரம்பிச்சிடலாம், டைம் ஆயிடுச்சுன்னா கியூ ஜாஸ்தி ஆயிடும். நீங்க நம்ம வேண்டப்பட்டவர் "ரிலேஷன்", உங்கள கியூல நிக்கவெக்காம கூட்டிட்டுப்போறதுக்கு இது தான் கரெக்ட் டைம், பேசாம வாங்க சார்என்று இன்னும் "ஜரூராய்" அழைத்து சென்றான் வசந்த். (மனதுக்குள் அரவிந்த், மாமா சொதப்பிடீங்களே என்று முணுமுணுத்தபடி...) இருவரும் ஒரு "லிப்ட்-இக்குள்" நுழைந்தனர். உள்ளே "4" என்ற பொத்தானை வசந்த் அமுக்க அதில் உள்ள லைட் பளிச்சிட்டது.
லிப்ட்டில் இறங்கி போகும் வழி எல்லாம், வசந்தை பார்த்து பெரும்பாலானோர் "குட் மார்னிங்" சொல்ல வசந்தும் பதில் மரியாதை செய்தான். அரவிந்த் மனதில் வசந்த் இங்கு பெரிய புள்ளிதான் போல என்று நினைக்கயில், ஒரு இடத்தில நின்ற வசந்த், அம்மா, நான் சொல்லல இவருக்கு தான் என "மோர்ஸ்"  கோட் போன்று கண்ணாலே சமிக்கை செய்தான்.
"சார் இந்த மேடம் எல்லாம் சொல்லுவாங்க" என அரவிந்திடம் சொல்லிவிட்டு, அங்கிருந்த வேறு சில நர்ஸ்களிடம் பேச தொடங்கினான் வசந்த். அடப்பாவி வசந்த் நீயும் சொதப்பிட்டியே என முணுமுணுத்த அரவிந்தின் நெற்றியில் ஏற்கனவே காய்ந்த வியர்வை மீது புது வியர்வை துளிகள் படர ஆரம்பித்தன. சற்றே அந்த நர்ஸை உற்று பார்த்தான் அரவிந்த், வழித்து வாரிய தலையும், கனத்த தமிழ் உச்சரிப்பும், அகண்ட கண்களும், இந்த நர்ஸின் பூர்வீகம் கேரளவாக இருக்க கூடும் என்ற யூகத்தை அளித்தது அரவிந்துக்கு, மேலும் கல்பனா பனிக்கர் என்ற பெயர் பலகை அந்த யூகத்தை ஊர்ஜித படுத்தியது. அது சரி வந்த வேலை விடுத்து பந்தக்கால் நடுவான் ஏன் என நினைத்த அரவிந்த், மெதுவாய் "மேடம்" என்பதற்குள் அந்த நர்ஸ் வேறு ஒரு பச்சை நிற பைலை பார்க்க ஆரம்பித்தாள். கவனத்தை கவர மீண்டும் ஒரு முறை உரக்க "மேடம்" என்று அரவிந்த் கூப்பிட்டான் (சிஸ்டர் என்று கூப்பிட ஏனோ அவன் மனம் இசைக்க வில்லை !!) , "478 ரூபாய் ஆகுது சார், கேஷ் ஆ, கார்டு ஆஎன்று அந்த நர்ஸ் நறுக்கென்று அரவிந்தை பார்த்து கேட்க, டிஜிட்டல் இந்தியாவின் வாரிசான அரவிந்த், தன் பள பளக்கும் நீல நிற கிரெடிட் கார்டை எடுத்து அங்கிருந்த இயந்திரம் ஒன்றில் உரசினான். பீப் என்ற சத்தம், பணம் கட்டியாச்சு என்றது.  "ப்ரொசீஜர்லாம் என்னங்கஎன அரவிந்த் கல்பனா நர்ஸை பார்த்து கேட்க, இவனை கொஞ்சம் கூட சட்டை செய்யாதது போல் கல்பனா, வேறு ஒரு வெள்ளை சாமியை பார்த்து, “முருகேசன், சாரை சாம்பிள் எடுக்க கூட்டிட்டுப்போங்க என்றாள். இது என்னடா இன்னொரு Mr. ஒயிட்டா என்று நினைக்கயில், அந்த வெள்ளை சாமி அரவிந்தை பார்த்து "இன்னா சார் வசந்த் உங்களாண்ட ஒண்ணுமே சொல்லலியா, இத்தை எல்லாமா லேடீஸ் ஆண்ட கேப்பாங்கோ, நம்மளான்டா கேளு சார் சொல்றேன் என்று சென்னை தமிழில் பேசிகொண்டே முருகேசன், ஒரு பெரிய அட்டை பெட்டியினுள் ஏதோ தொலாவிக்கொண்டு இருந்தான். தயக்கத்துடன் அரவிந்த், எல்லாம் முடிஞ்ச அப்புறம் ஜூஸ் குடுப்பாங்கலா? என்றான். தோடா, ஜூசா, சார் நீ என்ன பிளட் டொனேஷன் ஆ பண்ண போற ஜூஸ் லாம் குடுக்க. உனக்கு இது தான் மொத தபாவா சார் என்றான் அசட்டு சிரிப்புடன் முருகேசன். (மனதில் தன் மனைவி பூமா, நாகராஜ் மாமா, இன்னும் பல மூதாதையர்களை தீட்டி தீர்த்தான் அரவிந்த்..) மைண்ட் வாய்ஸ் என நினைத்து "இப்படி என்ன கொண்டு நிறுத்திடீங்களே" என சத்தமாய் வாய் விட்டே சொல்லிவிட்டான். இதை கேட்ட முருகேசன், "நிக்கலாம் தேவலை சார் இந்த டப்பா எட்துக்குனு போயி அந்த பக்கம் பாத்ரூமாண்ட சாம்பிள் புடிச்சி எடுத்தா சார் என்றான்.
அதற்குள் ஒரு கணீர் குரல், "அரவிந்த், என்ன எல்லாம் முடிஞ்சுதா" என்றது. திரும்பிப்பார்த்த அரவிந்த், "மாமா என்ன இவ்ளோ லேட்டா வரீங்க" என்றான். "என்னப்பா பண்றது, பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வர வேணாமா என்றார் சிரிப்புடன் அந்த நபர். முருகேசன் உடனே, "நாகராஜ் சார் இவரு உங்க சொந்தக்காரரா, இப்போ தான் டப்பா குட்துக்குறோம் சார்" என்றான். "ஓ சூப்பர், சரி அரவிந்த் சட்டுனு ஒரு 2 நிமிஷத்துல போயி சாம்பிள் எடுத்து குடுத்துட்டு வா" என்றார் நாகராஜ் மாமா. "மாமா 2 மினிட்ஸ் ல யா", இது என்ன யூரின் சாம்பிள்-ஆ உடனே எடுத்து தர, இது ஸ்பெர்ம் (விந்தணு) சாம்பிள் மாமா" என ஆச்சரியமும் எரிச்சலும் கலந்த தொணியில் கேட்டான் அரவிந்த். "ஏன் 2 நிமிஷத்துல முடியாதா, நாங்கலாம் பாக்காத டெஸ்ட் ஆ" என மாமா பதிலுக்கு கேட்க. 2 நிமிஷத்துல முடிஞ்சா அது ஆபத்து ஆச்சே என மனசுக்குள் முணுமுணுத்த படி... அந்த சிவப்பு மூடி போட்ட வெள்ளை டப்பாவை எடுத்து கொண்டு, ஜென்ட்ஸ் டாய்லெட் நோக்கி பயணம் ஆனான் அரவிந்த்.
"இன்ன சார் ஜூஸ் லாம் கேக்குறாரு உங்க சொந்தக்காரரு”, என கேலியாக முருகேசன் நாகராஜை பார்த்து கேட்க, "என்ன பண்றது முருகேசன், இந்த காலத்து பசங்க கொஞ்சம் கூட பிராக்டிகல்-ஆ யோசிக்கிறதே இல்ல" என பதிலுக்கு நாகராஜ் மாமா சிரித்தார். இப்படியே ஒரு 20 நிமிடத்திற்கு இந்த இரண்டு மேதாவிகளின் சம்பாஷணை தொடர்ந்தது. இதற்கிடையில் பதட்டம் குறைந்த நிலையிலும், முகத்தில் ஒரு ஒளியுடனும், நிரம்பிய அந்த வெள்ளை டப்பாவை ஒரு டிஷு பேப்பரில் பிடித்தபடி திரும்பி வந்தான் அரவிந்த். "இந்தாங்க முருகேசன் என அந்த டப்பாவை நீட்டினான்.
"என்னப்பா, இவ்ளோ டைம் ஆ எடுத்துப? என நாகராஜ் மாமா கேட்க, காண்டு பறவையென முறைத்தான் அரவிந்த். "முருகேசன், ரிசல்ட்ஸ் எப்போ வரும் என அரவிந்த் கேட்க, "நான் இந்த ஹாஸ்பிடல்ல தானே அட்மின் ஆ இருக்கேன், நானே 2 மணி நேரத்துல ரிசல்ட் கலெக்ட் பண்ணிட்டு உனக்கு வாட்ஸாப்ப் பண்றேன் என்றார் நாகராஜ் மாமா. (இப்போதெல்லாம் அட்மின்களின் ஆதிக்கம் அதிகமாகி போனது !!)
கடைசியாக "ஜூஸ்" ஏதும் இன்றி வெறும் கையோடு திரும்பினான் அரவிந்த்.
வரும் வழியெல்லாம் மக்கள் கூட்டம், இது போன்ற மல்டி ஸ்பேசியலிட்டி  ஆஸ்பத்திரிகள் எல்லாம் இப்போது நிரம்பி வழிவதற்கு முக்கிய காரணம் உடல்நலத்தை பற்றி மக்களுக்கு உள்ள பயமும், அதை காசாக்க நினைக்கும் ஆஸ்பத்திரிகள் நயமும் தான் என்று நினைத்து கொண்டே, வெளியே நிறுத்தப்பட்டுள்ள தன் க்ரே கலர் மாருதி ஸ்விப்ட் கார் வரை வந்துவிட்டான் அரவிந்த். காரில் ஏறி கிளம்பியவுடன் ப்ளூடூத் ஸ்பீக்கர் அலறியது, அலைபேசியில் பூமாவின் அழைப்பு.. "ஹே அரவிந்த், ரிசல்ட் என்ன ஆச்சு என்றாள் பூமா, "பூமா நீயும் கடுப்பேத்தாத, அதுக்குள்ள எப்டி ரிசல்ட் வரும், நான் இப்போ தான் சாம்பிள் குடுத்துட்டு வந்தேன், நீ என்ன அதுக்குள்ள 11 மிஸ் கால் குடுத்துருக்க." என்றான் "துருவாச கோபத்துடன்" அரவிந்த். "ஹே புருஷா, இப்போ ஏன் டென்ஷன் கூல்," "பின்ன என்ன பூமா, மாமா என்னடானா, 2 நிமிஷத்துல சாம்பிள் எடுனு சொல்லறாரு, நீ என்னடானா அதுக்குள்ள ரிசல்ட் கேக்குற, அங்க ஒருத்தன் என்னடானா நர்ஸ்கிட்ட சாம்பிள் கலெக்க்ஷன் பத்தி ஏன் கேட்ட னு கேக்குறான், என்ன பாத்தா உங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது " என பொங்கினான் அரவிந்த். "சரி, சரி, வீட்டுக்கு வா பேசிக்கலாம் என்று பம்மிக்கொண்டு அழைப்பை துண்டித்தாள் பூமா.
பரீட்சை ரிசல்ட்டுக்குக்கூட இவன் இவ்வளவு ஆவலாக காத்திருந்தது இல்லை , அப்படி ஒரு பதட்டம் .. 2 மணி நேரம் எப்படி கழியும் என்று கார் ஒட்டிகொண்டே யோசித்தான் அரவிந்த். வீட்டிற்கு போகவும் மனமில்லை, ரிசல்ட் வந்தவுடன் போகலாமே என்ற எண்ணம் அவனுக்கு. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகினாங்க நிமிடங்கள் வருடங்கள் என தோன்றியது. 15 நிமிடத்திற்கு ஒரு முறை வாட்சப்பில் நாகராஜ் மாமா "லாஸ்ட் ஸீன்" என்ன என்றும், ஆன்லைன் எப்போ வருவார் என்றும் பார்த்தான்.  பதட்டத்தை தணிக்க இளையராஜா ஹிட்ஸ் போட்டான், "என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டு போகும்" என்று சோக கானம் பாடியதும் பாடலுக்கு முழுக்கு போட்டு ரோட்டை நோக்கி வண்டியை நகர்த்தினான். சட்டென ஒரு வாட்ஸாப்ப் நோட்டிபிகேஷன் வந்தது.. நாகராஜ் மாமா என்று பார்த்ததும் பேரானந்த பெருவெள்ளத்தில், வாட்சப்பை திறந்து பார்த்தான்.
கடந்த காலம் வெறும் நிகழ்வு, எதிர் காலம் ஒரு மாயை, நிகழ்காலத்தில் வாழ், அதுவே நிதர்சனம்.. இதை 11 பேருக்கு பார்வாட் செய்தால் சாய் பாபா உன்னை காப்பார் என்ற மெசேஜ் தான் அது. அதை பார்த்ததும் என்ன செய்வது என்று அறியாமல், கொல் என சிரித்தான் அரவிந்த்.
அப்போது ரோட்டில் ஒரு நபர் கண்ணில் பட்டார், அவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடனும் விளையாடிக்கொண்டே உச்சி வெயிலிலும் உல்லாசமாய் சென்று கொண்டு இருந்தார். பெரிய மகன் அப்பாவின் ஜிப்பாவை பிடித்து கொண்டும், சிறிய மகன் அப்பாவின் தோளில் ஏறிக்கொண்டும் இருந்தனர். தன்னை பற்றி கவலை படாத அப்பா தன் மகன்களுக்கு இரண்டு தொப்பி வாங்கி மாட்டி விட்டு கொண்டு இருந்தார். அவரின் கசங்கிய சட்டையும், குழி விழுந்த கன்னமும் அவரின் ஏழ்மை நிலை சொல்லியது. அரவிந்த் ஒரு நிமிடம் தன் காரை நிறுத்திவிட்டு, வாட்ஸாப்ப் மெசேஜ் சொன்ன நிகழ்காலத்தின் நீட்சியாக தன்னை சுற்றி காரினுள் நோட்டம் இட்டான். உள்ளங்கால் குளிரும் அளவிற்கு குளிரூட்டப்பட்ட கார், தன் சீட்டின் அருகில் உள்ள ஆப்பிள் போன், அதன் அறுகில் நிறை மாத கர்ப்பிணி போல் உள்ள அவனது மனி பர்ஸ். காரின் ஸ்டேரிங் பிடித்த அவன் கைகளில் பூட்டப்பட்ட தங்க ப்ரஸ்ட்லெட் என எல்லாம் இருந்தும், அந்த "நடராஜா" அப்பாவின் முகத்தில் இருக்கும் சிரிப்பும், கண்களில் இருக்கும் திருப்தியும் நம்மிடம் இல்லையே என யோசித்தான். காலை முதல் தான் சந்தித்த "சோதனைகள்" யாவும் தன்னை இப்படி ஒரு பிள்ளை செல்வத்தை நோக்கி பிரயாணிக்க செய்யப்போகிறது என்பதை எண்ணி ஒரு நிமிடம் நெகிழ்ந்து போனான் அரவிந்த்.
அந்த தருவாயில் மற்றொரு முறை அலைபேசி அலறியது, அப்பாவின் அழைப்பு, "ஏண்டா காத்தால டெஸ்ட்ல ரொம்ப லேட் பண்ணிட்டியாமே" என்ற அலறலுடன்...
நேசமுடன்
நெ செ

Friday 27 March 2020

மேட் இன் சைனா !!




மேட் இன் சைனா

அது ஒரு ரம்யமான மாலை பொழுது, தினகரன் தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தான். மனைவி "ராதிகா" தீட்சண்யமான விழிகள் மட்டும் அல்லாமல் சிந்தனையும் கொண்டு இருப்பவள். இவர்கள் பேச்சுக்கு மத்தியில் பீறிட்டுக்கொண்டு கேட்டது ஒரு சிசுவின் அழுகை சத்தம். பிறந்து பத்து நாட்களே ஆன தங்களுடைய மகள் மிருணாளினியின் குரல். பசியில் தான் அழுகிறாள்  என உணர்ந்த ராதிகா, சீக்கிரம் கிளம்புங்க நம்ம சிட்னில சீக்கிரமே லாக் டௌன்னு பேசிக்கிறாங்க. நாம வேற கை குழந்தையை வெச்சிருக்கோம். வேகமா போயி சூப்பர் மார்க்கெட் ல டிஸ்சு  பேப்பர் , அரிசி, பருப்பு, பிரெட் வாங்கிட்டுவாங்க" என்றாள் ராதிகா. அதற்கோ தினகரன், இப்படியே ஆளாளுக்கு பயந்து இப்படி அத்தியாவசிய பொருட்களை வாங்கிட்டேபோனா, வயசானவங்க, மாற்று திறனாளிகள்லாம் என்ன பண்ணுவாங்க "ராதி" என கரிசனத்துடன் வினவினான்.

"ஏங்க மத்தவங்க யாரும் பண்ணாத வேலையா நாம பண்றோம்" என தன வாதத்தை முன் வைத்தால் "ராதி". இருந்தாலும் நமக்கு எவளோ வேணுமோ அவளோ மட்டும் வாங்கிட்டு  வரலாமே எனும் "ஜீவானந்த" கொள்கையில் திடமாய் நின்றான் தினகரன்.

நீங்க எப்படியோ போங்க டின்னருக்கு பொங்க அரிசி வேணும், அதைமட்டுமாவது வாங்கிட்டு வாங்க. இந்த ஊரு லோக்கல் ஆஸ்திரேலியன்ஸ் மாதிரி என்னால டெய்லி பிரெட் லாம் சாப்பிடமுடியாது. சீக்கிரம் போங்க, நான் நம்ம அம்முக்கு பால் குடுக்கணும் என்றால் ராதிகா இம்முறை சற்றே அழுத்தமாக.

சிட்னி மாநகரத்து தெருக்கள் இப்படி வெறிச்சோடி போயிருந்ததை பார்ப்பதற்கு கல்யாணம் நடைபெறாத கல்யாண மண்டபம் போல் போல் தோன்றியது தினகரனுக்கு. இதுவும் தற்காலிகம் தான் என தன்னை தானே தேற்றி கொண்டு நடக்க தொடங்கினான்.

கார்த்திகை தீபம் போன்று சாலையெங்கும் தொங்கும் மின் விளக்குகள், இருபுறமும் வாகனங்கள் செல்ல இலகுவாக வெள்ளை நிற கோடுகள், பரீட்சை பேப்பரின் "மார்ஜின்" போல. பாதசாரிகள் நடப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் "நடைபாதை" சாலையின் ஓரமாக. தொடர்ந்து நடந்தால் "டிராபிக் சிக்னல்" இங்கு சிவப்பு விளக்கு போட்டால் வாகனம் நின்றுவிடுவதை, ஆறு மாதம் முன்னரே ஆஸ்திரேலியா புலம் பெயர்ந்த தினகரன் இன்னும் மிரட்சியுடனே பார்த்தான் ஒவ்வொரு முறையும் சர்க்கஸ் பார்க்கும் வியப்புடன். "ஜீப்ரா" கிராஸ்ஸிங் எனும் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில முன்னுரிமை பாதசாரிகளுக்கு தான் என்றும், வாகனங்கள் சற்றே வழிவிட வேண்டும் என்னும் "கான்செப்ட்" புலங்கிதத்தை அளித்தது தினகரனுக்கு. வழி நடுவே "கரோனா" பயத்தில் எப்படி மக்கள் பீதியுடன், தேவைக்கு மேல் அத்தியாவசிய பொருட்களை "பதுக்கி" வைத்து கொள்கிறார்கள் என்பதையும், அதனால் தேவையுள்ளவர்கள் குறிப்பாக வயது முதிந்தவர்கள் எப்படி இந்த பொருட்கள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைந்து நொந்து நடந்து கொண்டு இருந்தான். அந்த சிந்தனையில் மூழ்கி திளைத்தவனின் காதுகளில் ஒரு சத்தம் கேட்டது. எந்த சத்தத்தை கேட்டாலும், இது ஒரு மொழியா இல்லை வெறும் சத்தமா என மனிதனின் மனம் சற்றே ஆராயும் , அதே நிலைதான் தினகரனுக்கும். 10 வினாடிகள் கவனித்து விட்டு அது வெறும் சத்தம் இல்லை, யாரோ ஒரு பெண்மணியின் குரல் என்று புரிந்தது அவனுக்கு. தன் வலதுபுறமாக திரும்பி பார்த்தான். அங்கே தெற்காசிய முகம் ஒன்று தென்பட்டது. சிவப்பு நிற சட்டையும், கருப்பு நிற முழு கால் சட்டையும் போட்டு கொண்டு ஒரு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, புரியாத (தினகரனுக்கு புரியாத) பாஷையில் பேசினார். பாஷை புரியவில்லை என்றாலும், அந்த மூதாட்டி தினகரனை பார்த்து தான் சமிஞை செய்கிறார் என்று புரிந்தது தினகரனுக்கு.  அதுவரை "ஜெட்" வேகத்தில் நடந்து கொண்டு இருந்தவன் சற்றே நிதானப்பட்டு அந்த மூதாட்டியிடம் சற்றே அருகில் சென்று "இஸ் எவரித்திங் ஆல் ரைட்" என்று உலக பொதுமொழியாக நாம் பாவிக்கும் ஆங்கிலத்தின் மூலம் விசாரித்தான். அதற்கு அந்த பாட்டியோ புரியாத பாஷயில் பேசினாள் இன்னும் வேகமாகவும் பதட்டத்துடனும். அவர்களுக்கு ஏதோ பிரச்சனை போலும் என்பது புரிந்தது தினகரனுக்கு. மீண்டும் அந்த மூதாட்டியுடன் " டூ யூ நோ இங்கிலிஷ், இங்கிலிஷ், இங்கிலிஷ் என்று மூன்று முறை ஏலமிட்டான். பலன் இல்லை, அந்த மூதாட்டி இன்னும் பதட்டத்துடன் அதே பாஷயில் பேசினார்.  தெற்காசிய முகம் என்றாலே "சீனா" வாகத்தான் இருக்கும் என்ற லாஜிக்கில் "சைனா" ?? என தயக்கத்துடன் கேட்டான் தினகரன். அதற்கு அந்த மூதாட்டி "சைனா, சைனா" என்று அவள் பங்குக்கு ஏலம் போட்டாள். தூக்கி வாரி போட்டது தினகரனுக்கு, அப்போது ஆஸ்திரேலியாவில் "கொரோனா" என்ற உயிர் கொல்லும் வைரஸின் தாக்கம் தலை விரித்து ஆடியது. அந்த வைரஸ் உருவான இடம் "சைனா" என்று உலகெங்குங்கும் நம்பப்பட்டது. இதற்கிடையில் ஒரு சீன மூதாட்டியிடம் நின்று பேசுகிறோமே என்ற எண்ணம் அச்சுறுத்தியது தினகரனை. இவை எல்லாம் ஒரு புறம் இருப்பினும், உதவி தேவைப்படும் நேரத்தில் உதறி செல்வதை மனம் ஏற்க மறுத்தது. மற்றொரு புறம் என்னதான் இருந்தாலும் உயிர்கொல்லி வைரஸ் ஆச்சேய். "அல்லு" இல்லாமலா போகும் எனவே நாசுக்காக "சாரி" என சொல்லிவிட்டு நழுவ நினைத்த வேளையில், அந்த பாட்டியின் ரூபத்தில் தினகரனின் பச்சிளம் குழந்தை தெரிந்தது அவனுக்கு.

ச்சே !! இந்த பாட்டிக்கு என்ன தான் பிரச்சனையில் இருக்கிறாள் என்று தெரியாமல் விட்டுச்செல்வது அழும் குழந்தையை அப்படியே அழவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்று தோன்றியது தினகரனுக்கு. அந்த பாட்டி இவனுடைய உடல் மொழியில் இருந்து தினகரன் அவளுக்கு உதவ நினைக்கிறான் என்று புரிந்து கொண்டாள். உடனே தன் கையில் இருக்கும் ஆப்பிள் போனை காண்பித்து ஏதோ சொன்னாள். வழக்கம் போல தினகரனுக்கு புரியவில்லை. இன்னொரு முறை "இங்கிலிஷ்" என்றால் பிரயோஜனம் இல்லை என்று , ஆங்கிலத்துடன் சமிக்கை மொழியில் பெபட ஆரம்பித்தான் . பாட்டியின் போனை நோக்கி என்ன என்று " தம்பஸ் அப்" சின்னத்தை பக்க வாட்டில் காட்டி உலுக்கினான். பாட்டி இம்முறை அவள் போனின் ஸ்க்ரீனை இவளிடம் நீட்டினாள். கண்ணை கூசும் வெளிச்சம், தெருக்களின் வடிவம் போன்ற கோடுகள், ஆங்காங்கே சீன எழுத்துக்கள் , அய்யயோ " மேப்ஸ்" கூட "சைனீஸிலா" முடியல என்று நொந்துகொண்டான். அனால் அந்த பாட்டி வழி தவறி வந்துவிட்டாள் என்பதை புரிந்து கொண்டான். வழி காட்ட வழி என்ன என்று யோசித்தான்.

சுற்றி முற்றி பார்த்தான் , அருகில் வேறொரு தெற்காசிய முகம் தென்பட்டது அந்த வெறிச்சோடிய சாலையில், அந்த நபரிடம் "டூ யூ நோ சைனீஸ் , திஸ் லேடி நீட்ஸ் யுவர் ஹெல்ப் " என்றான். என்னமோ  இவன் பேசியது அனைத்தும் புரிந்தாற்போல் பாட்டியும் தினகரனை "சப்போர்ட்" செய்வது போல் தலையை ஆட்டினாள். அந்த மூன்றாவது நபர் "சாரி, ஐ அம் கொரியன் , நோ சைனீஸ் என்றார். முதல் துருப்பு சீட்டு "மொக்கை" வாங்கியதே என மனம் வெந்தான் தினகரன். இருப்பினும் மனம் தளராமல் பாட்டியை தன்னோடு நடக்குமாறு சைகை செய்தான். பாட்டியும் பச்சிளம் குழந்தை போல் , இவன் உதவி செய்வான் எனும் நம்பிக்கையில் கூடவே நடக்க தொடங்கினாள்.  வழியில் மற்றொரு டெஹ்ரகசிய முகம், மற்றொரு நம்பிக்கை , மறுபடியும் "சைனீஸ்" தெறியுமா என்ற கேள்வி. இம்முறை அந்த நபர் அந்த பாட்டியிடம் ஏதோ சொன்னார். பாஷை புரியாத தினகரன் அவர் சைனீஸில் தான் பாட்டியுடன் பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு மகிழ்ந்தான்.  ஆனால் பாட்டியின் முகத்தில் மட்டும் "நெற்றி சுருக்கம்". ஒன்றும் புரியவில்லை தினகரனுக்கு. தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள "டிட் யூ ஸ்பீக் இந்த சைனீஸ் " என்றான். அதற்கோ அவர் மிகவும் கூலாக , "ஐ டோலடு ஹர் தட் ஐ டோன்ட் நோ சைனீஸ் இன் சைனீஸ்" என்றார். மற்றும் ஒரு பேரிடி. இவன் நம்மைப்போல் ஹிந்தி பேச தெரியாமல், "ஹிந்தி நஹி மாலும்" என்று எனக்கு ஹிந்தி தெரியாது என்பதை மற்றும் ஹிந்தியில் கற்று வைத்திருப்போமே அதுபோல். சரி ஒரு பயனும் இல்லை என்று நினைத்து கொண்டு பாட்டியுடன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். தினகரன் மனதில், இந்த பாட்டியை வேறு கூடி சுற்றுகிறோமே , எங்கிருந்து உதவி கிடைக்கும், ஒரு வேளை கிடைக்கவில்லை என்றால் இந்த பாட்டியிடம் எப்படி சொல்லி சமாளிப்பது என்ற எண்ணம் சிறுதளவு கூட இல்லை. மாறாக எப்படியாவது உதவி செய்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வியாபித்து இருந்தது. அந்த எண்ணம் அவனை கொஞ்சம் கூட தளர்வடையாமல் முன் செல்ல உந்தித்தள்ளியது.

சற்று தொலைவு நடந்தவுடன் அந்த சாலையின் முனையில் "ஷேர் டீ" என்று கூறப்படும் தெற்காசிய வகையான "மில்க் டீ" எனப்படும் குளிர்ந்த பாலில் சில பழ வகைகள் போட்டு தயாரிக்கும் பானம் விற்கும் இடம். கண்டவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி காரணம் அந்த கடாயில் வேலை செய்யும் ஒரு பெண் தெற்காசியர் போன்று இருந்தாள். தயக்கமின்றி மீண்டும் " கேன் யூ ஸ்பீக் சைனீஸ், திஸ் லேடி நீட்ஸ் யுவர் ஹெல்ப் " என்றான். உடனே அந்த பெண் பாட்டியிடம் சரளமாக பேச தொடங்கினாள். கடந்த 20 நிமிடத்தில் அந்த பாட்டியின் முகத்தில் முதன்முறையாக சிரிப்பை பார்த்தான் தினகரன். பாட்டியின் துயர் துடைக்க வழி கிடைத்து விட்டது என்று இவனுக்கு புரிந்துவிட்டது. 5 நிமிடம் பேசிமுடித்த அந்த பெண்ணிடம், பாட்டிக்கு என்ன பிரச்சனையாம் என்று கேட்டான். அடப்பாவி, இது தெரியாமத்தான் பாடிய கூட்டிட்டு சுத்துறியா என்று ஆச்சரிய பார்வையுடன் பேச தொடங்கினாள் அந்த பெண். அந்த பாட்டி தன் மகளின் வீட்டுக்கு இரண்டு நாடுகளுக்கு முன் வந்ததாகவும், வாக்கிங் வந்த இடத்தில் வழி மறந்து விட்டதாகவும், அந்த சமயம் தன் நீங்கள் வந்து உதவியதாகவும் கூறினாள் என்றும் சொன்னாள். சொல்லிவிட்டு, அந்த பாட்டியின் கை பேசியில் எண்களை அமுக்கி அந்த பெண் ஏதோ பேசினாள். பேசியது அந்த பாட்டியின் மக்களிடம் தான் என்றும், அந்த மகள் இன்னும் 15 நிமிடங்களில் வந்து பாட்டியை அழைத்துச்செல்வார் எனவும் தெரிவித்தாள். கேட்ட தினகரனுக்கு ஒரு இனம் புரியாத திருப்தி. 

சற்று திரும்பினால், நன்றி நிறைந்த கண்களுடன், கண்ணீர் மல்க தன் இரு கரங்களை கூப்பி, குனிந்து வணக்கம் போல் சமிக்கை செய்த பாட்டி "சைனீஸில்" ஏதோ சொன்னார் தினகரனிடம். இம்முறை மட்டும் ஏனோ அவனுக்கு அது புரிந்தது. தினகரன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான், தன் கைபேசியில் உள்ள தன் குழந்தையின் முகத்தை பார்த்து புன்னகையுடன்.

மனிதம் மலரட்டும் !!

நேசமுடன்,
நெ செ