Friday, 27 March 2020

மேட் இன் சைனா !!
மேட் இன் சைனா

அது ஒரு ரம்யமான மாலை பொழுது, தினகரன் தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தான். மனைவி "ராதிகா" தீட்சண்யமான விழிகள் மட்டும் அல்லாமல் சிந்தனையும் கொண்டு இருப்பவள். இவர்கள் பேச்சுக்கு மத்தியில் பீறிட்டுக்கொண்டு கேட்டது ஒரு சிசுவின் அழுகை சத்தம். பிறந்து பத்து நாட்களே ஆன தங்களுடைய மகள் மிருணாளினியின் குரல். பசியில் தான் அழுகிறாள்  என உணர்ந்த ராதிகா, சீக்கிரம் கிளம்புங்க நம்ம சிட்னில சீக்கிரமே லாக் டௌன்னு பேசிக்கிறாங்க. நாம வேற கை குழந்தையை வெச்சிருக்கோம். வேகமா போயி சூப்பர் மார்க்கெட் ல டிஸ்சு  பேப்பர் , அரிசி, பருப்பு, பிரெட் வாங்கிட்டுவாங்க" என்றாள் ராதிகா. அதற்கோ தினகரன், இப்படியே ஆளாளுக்கு பயந்து இப்படி அத்தியாவசிய பொருட்களை வாங்கிட்டேபோனா, வயசானவங்க, மாற்று திறனாளிகள்லாம் என்ன பண்ணுவாங்க "ராதி" என கரிசனத்துடன் வினவினான்.

"ஏங்க மத்தவங்க யாரும் பண்ணாத வேலையா நாம பண்றோம்" என தன வாதத்தை முன் வைத்தால் "ராதி". இருந்தாலும் நமக்கு எவளோ வேணுமோ அவளோ மட்டும் வாங்கிட்டு  வரலாமே எனும் "ஜீவானந்த" கொள்கையில் திடமாய் நின்றான் தினகரன்.

நீங்க எப்படியோ போங்க டின்னருக்கு பொங்க அரிசி வேணும், அதைமட்டுமாவது வாங்கிட்டு வாங்க. இந்த ஊரு லோக்கல் ஆஸ்திரேலியன்ஸ் மாதிரி என்னால டெய்லி பிரெட் லாம் சாப்பிடமுடியாது. சீக்கிரம் போங்க, நான் நம்ம அம்முக்கு பால் குடுக்கணும் என்றால் ராதிகா இம்முறை சற்றே அழுத்தமாக.

சிட்னி மாநகரத்து தெருக்கள் இப்படி வெறிச்சோடி போயிருந்ததை பார்ப்பதற்கு கல்யாணம் நடைபெறாத கல்யாண மண்டபம் போல் போல் தோன்றியது தினகரனுக்கு. இதுவும் தற்காலிகம் தான் என தன்னை தானே தேற்றி கொண்டு நடக்க தொடங்கினான்.

கார்த்திகை தீபம் போன்று சாலையெங்கும் தொங்கும் மின் விளக்குகள், இருபுறமும் வாகனங்கள் செல்ல இலகுவாக வெள்ளை நிற கோடுகள், பரீட்சை பேப்பரின் "மார்ஜின்" போல. பாதசாரிகள் நடப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் "நடைபாதை" சாலையின் ஓரமாக. தொடர்ந்து நடந்தால் "டிராபிக் சிக்னல்" இங்கு சிவப்பு விளக்கு போட்டால் வாகனம் நின்றுவிடுவதை, ஆறு மாதம் முன்னரே ஆஸ்திரேலியா புலம் பெயர்ந்த தினகரன் இன்னும் மிரட்சியுடனே பார்த்தான் ஒவ்வொரு முறையும் சர்க்கஸ் பார்க்கும் வியப்புடன். "ஜீப்ரா" கிராஸ்ஸிங் எனும் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில முன்னுரிமை பாதசாரிகளுக்கு தான் என்றும், வாகனங்கள் சற்றே வழிவிட வேண்டும் என்னும் "கான்செப்ட்" புலங்கிதத்தை அளித்தது தினகரனுக்கு. வழி நடுவே "கரோனா" பயத்தில் எப்படி மக்கள் பீதியுடன், தேவைக்கு மேல் அத்தியாவசிய பொருட்களை "பதுக்கி" வைத்து கொள்கிறார்கள் என்பதையும், அதனால் தேவையுள்ளவர்கள் குறிப்பாக வயது முதிந்தவர்கள் எப்படி இந்த பொருட்கள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைந்து நொந்து நடந்து கொண்டு இருந்தான். அந்த சிந்தனையில் மூழ்கி திளைத்தவனின் காதுகளில் ஒரு சத்தம் கேட்டது. எந்த சத்தத்தை கேட்டாலும், இது ஒரு மொழியா இல்லை வெறும் சத்தமா என மனிதனின் மனம் சற்றே ஆராயும் , அதே நிலைதான் தினகரனுக்கும். 10 வினாடிகள் கவனித்து விட்டு அது வெறும் சத்தம் இல்லை, யாரோ ஒரு பெண்மணியின் குரல் என்று புரிந்தது அவனுக்கு. தன் வலதுபுறமாக திரும்பி பார்த்தான். அங்கே தெற்காசிய முகம் ஒன்று தென்பட்டது. சிவப்பு நிற சட்டையும், கருப்பு நிற முழு கால் சட்டையும் போட்டு கொண்டு ஒரு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, புரியாத (தினகரனுக்கு புரியாத) பாஷையில் பேசினார். பாஷை புரியவில்லை என்றாலும், அந்த மூதாட்டி தினகரனை பார்த்து தான் சமிஞை செய்கிறார் என்று புரிந்தது தினகரனுக்கு.  அதுவரை "ஜெட்" வேகத்தில் நடந்து கொண்டு இருந்தவன் சற்றே நிதானப்பட்டு அந்த மூதாட்டியிடம் சற்றே அருகில் சென்று "இஸ் எவரித்திங் ஆல் ரைட்" என்று உலக பொதுமொழியாக நாம் பாவிக்கும் ஆங்கிலத்தின் மூலம் விசாரித்தான். அதற்கு அந்த பாட்டியோ புரியாத பாஷயில் பேசினாள் இன்னும் வேகமாகவும் பதட்டத்துடனும். அவர்களுக்கு ஏதோ பிரச்சனை போலும் என்பது புரிந்தது தினகரனுக்கு. மீண்டும் அந்த மூதாட்டியுடன் " டூ யூ நோ இங்கிலிஷ், இங்கிலிஷ், இங்கிலிஷ் என்று மூன்று முறை ஏலமிட்டான். பலன் இல்லை, அந்த மூதாட்டி இன்னும் பதட்டத்துடன் அதே பாஷயில் பேசினார்.  தெற்காசிய முகம் என்றாலே "சீனா" வாகத்தான் இருக்கும் என்ற லாஜிக்கில் "சைனா" ?? என தயக்கத்துடன் கேட்டான் தினகரன். அதற்கு அந்த மூதாட்டி "சைனா, சைனா" என்று அவள் பங்குக்கு ஏலம் போட்டாள். தூக்கி வாரி போட்டது தினகரனுக்கு, அப்போது ஆஸ்திரேலியாவில் "கொரோனா" என்ற உயிர் கொல்லும் வைரஸின் தாக்கம் தலை விரித்து ஆடியது. அந்த வைரஸ் உருவான இடம் "சைனா" என்று உலகெங்குங்கும் நம்பப்பட்டது. இதற்கிடையில் ஒரு சீன மூதாட்டியிடம் நின்று பேசுகிறோமே என்ற எண்ணம் அச்சுறுத்தியது தினகரனை. இவை எல்லாம் ஒரு புறம் இருப்பினும், உதவி தேவைப்படும் நேரத்தில் உதறி செல்வதை மனம் ஏற்க மறுத்தது. மற்றொரு புறம் என்னதான் இருந்தாலும் உயிர்கொல்லி வைரஸ் ஆச்சேய். "அல்லு" இல்லாமலா போகும் எனவே நாசுக்காக "சாரி" என சொல்லிவிட்டு நழுவ நினைத்த வேளையில், அந்த பாட்டியின் ரூபத்தில் தினகரனின் பச்சிளம் குழந்தை தெரிந்தது அவனுக்கு.

ச்சே !! இந்த பாட்டிக்கு என்ன தான் பிரச்சனையில் இருக்கிறாள் என்று தெரியாமல் விட்டுச்செல்வது அழும் குழந்தையை அப்படியே அழவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்று தோன்றியது தினகரனுக்கு. அந்த பாட்டி இவனுடைய உடல் மொழியில் இருந்து தினகரன் அவளுக்கு உதவ நினைக்கிறான் என்று புரிந்து கொண்டாள். உடனே தன் கையில் இருக்கும் ஆப்பிள் போனை காண்பித்து ஏதோ சொன்னாள். வழக்கம் போல தினகரனுக்கு புரியவில்லை. இன்னொரு முறை "இங்கிலிஷ்" என்றால் பிரயோஜனம் இல்லை என்று , ஆங்கிலத்துடன் சமிக்கை மொழியில் பெபட ஆரம்பித்தான் . பாட்டியின் போனை நோக்கி என்ன என்று " தம்பஸ் அப்" சின்னத்தை பக்க வாட்டில் காட்டி உலுக்கினான். பாட்டி இம்முறை அவள் போனின் ஸ்க்ரீனை இவளிடம் நீட்டினாள். கண்ணை கூசும் வெளிச்சம், தெருக்களின் வடிவம் போன்ற கோடுகள், ஆங்காங்கே சீன எழுத்துக்கள் , அய்யயோ " மேப்ஸ்" கூட "சைனீஸிலா" முடியல என்று நொந்துகொண்டான். அனால் அந்த பாட்டி வழி தவறி வந்துவிட்டாள் என்பதை புரிந்து கொண்டான். வழி காட்ட வழி என்ன என்று யோசித்தான்.

சுற்றி முற்றி பார்த்தான் , அருகில் வேறொரு தெற்காசிய முகம் தென்பட்டது அந்த வெறிச்சோடிய சாலையில், அந்த நபரிடம் "டூ யூ நோ சைனீஸ் , திஸ் லேடி நீட்ஸ் யுவர் ஹெல்ப் " என்றான். என்னமோ  இவன் பேசியது அனைத்தும் புரிந்தாற்போல் பாட்டியும் தினகரனை "சப்போர்ட்" செய்வது போல் தலையை ஆட்டினாள். அந்த மூன்றாவது நபர் "சாரி, ஐ அம் கொரியன் , நோ சைனீஸ் என்றார். முதல் துருப்பு சீட்டு "மொக்கை" வாங்கியதே என மனம் வெந்தான் தினகரன். இருப்பினும் மனம் தளராமல் பாட்டியை தன்னோடு நடக்குமாறு சைகை செய்தான். பாட்டியும் பச்சிளம் குழந்தை போல் , இவன் உதவி செய்வான் எனும் நம்பிக்கையில் கூடவே நடக்க தொடங்கினாள்.  வழியில் மற்றொரு டெஹ்ரகசிய முகம், மற்றொரு நம்பிக்கை , மறுபடியும் "சைனீஸ்" தெறியுமா என்ற கேள்வி. இம்முறை அந்த நபர் அந்த பாட்டியிடம் ஏதோ சொன்னார். பாஷை புரியாத தினகரன் அவர் சைனீஸில் தான் பாட்டியுடன் பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு மகிழ்ந்தான்.  ஆனால் பாட்டியின் முகத்தில் மட்டும் "நெற்றி சுருக்கம்". ஒன்றும் புரியவில்லை தினகரனுக்கு. தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள "டிட் யூ ஸ்பீக் இந்த சைனீஸ் " என்றான். அதற்கோ அவர் மிகவும் கூலாக , "ஐ டோலடு ஹர் தட் ஐ டோன்ட் நோ சைனீஸ் இன் சைனீஸ்" என்றார். மற்றும் ஒரு பேரிடி. இவன் நம்மைப்போல் ஹிந்தி பேச தெரியாமல், "ஹிந்தி நஹி மாலும்" என்று எனக்கு ஹிந்தி தெரியாது என்பதை மற்றும் ஹிந்தியில் கற்று வைத்திருப்போமே அதுபோல். சரி ஒரு பயனும் இல்லை என்று நினைத்து கொண்டு பாட்டியுடன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். தினகரன் மனதில், இந்த பாட்டியை வேறு கூடி சுற்றுகிறோமே , எங்கிருந்து உதவி கிடைக்கும், ஒரு வேளை கிடைக்கவில்லை என்றால் இந்த பாட்டியிடம் எப்படி சொல்லி சமாளிப்பது என்ற எண்ணம் சிறுதளவு கூட இல்லை. மாறாக எப்படியாவது உதவி செய்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வியாபித்து இருந்தது. அந்த எண்ணம் அவனை கொஞ்சம் கூட தளர்வடையாமல் முன் செல்ல உந்தித்தள்ளியது.

சற்று தொலைவு நடந்தவுடன் அந்த சாலையின் முனையில் "ஷேர் டீ" என்று கூறப்படும் தெற்காசிய வகையான "மில்க் டீ" எனப்படும் குளிர்ந்த பாலில் சில பழ வகைகள் போட்டு தயாரிக்கும் பானம் விற்கும் இடம். கண்டவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி காரணம் அந்த கடாயில் வேலை செய்யும் ஒரு பெண் தெற்காசியர் போன்று இருந்தாள். தயக்கமின்றி மீண்டும் " கேன் யூ ஸ்பீக் சைனீஸ், திஸ் லேடி நீட்ஸ் யுவர் ஹெல்ப் " என்றான். உடனே அந்த பெண் பாட்டியிடம் சரளமாக பேச தொடங்கினாள். கடந்த 20 நிமிடத்தில் அந்த பாட்டியின் முகத்தில் முதன்முறையாக சிரிப்பை பார்த்தான் தினகரன். பாட்டியின் துயர் துடைக்க வழி கிடைத்து விட்டது என்று இவனுக்கு புரிந்துவிட்டது. 5 நிமிடம் பேசிமுடித்த அந்த பெண்ணிடம், பாட்டிக்கு என்ன பிரச்சனையாம் என்று கேட்டான். அடப்பாவி, இது தெரியாமத்தான் பாடிய கூட்டிட்டு சுத்துறியா என்று ஆச்சரிய பார்வையுடன் பேச தொடங்கினாள் அந்த பெண். அந்த பாட்டி தன் மகளின் வீட்டுக்கு இரண்டு நாடுகளுக்கு முன் வந்ததாகவும், வாக்கிங் வந்த இடத்தில் வழி மறந்து விட்டதாகவும், அந்த சமயம் தன் நீங்கள் வந்து உதவியதாகவும் கூறினாள் என்றும் சொன்னாள். சொல்லிவிட்டு, அந்த பாட்டியின் கை பேசியில் எண்களை அமுக்கி அந்த பெண் ஏதோ பேசினாள். பேசியது அந்த பாட்டியின் மக்களிடம் தான் என்றும், அந்த மகள் இன்னும் 15 நிமிடங்களில் வந்து பாட்டியை அழைத்துச்செல்வார் எனவும் தெரிவித்தாள். கேட்ட தினகரனுக்கு ஒரு இனம் புரியாத திருப்தி. 

சற்று திரும்பினால், நன்றி நிறைந்த கண்களுடன், கண்ணீர் மல்க தன் இரு கரங்களை கூப்பி, குனிந்து வணக்கம் போல் சமிக்கை செய்த பாட்டி "சைனீஸில்" ஏதோ சொன்னார் தினகரனிடம். இம்முறை மட்டும் ஏனோ அவனுக்கு அது புரிந்தது. தினகரன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான், தன் கைபேசியில் உள்ள தன் குழந்தையின் முகத்தை பார்த்து புன்னகையுடன்.

மனிதம் மலரட்டும் !!

நேசமுடன்,
நெ செ

2 comments: