Wednesday 25 March 2020

வண்டிச்சத்தம்






வண்டிச்சத்தம்

டோர்ஸ் ஆர் கிலோசிங் ப்ளீஸ் ஸ்டான்ட் கிளியர்என்று சொன்னதுதான் தாமதம், இந்த ரயில் பெட்டியின் இரண்டு கதவுகளும் ஒன்றை ஒன்று முத்தமிட்டு கொண்டு மூடியதை பார்த்து வியந்தான் ரமணி”. ஆண்பால், பெண்பால் என்ற எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் பெயர் தான் இந்த ரமணி. இதற்காக சில முறை பெருமிதமும், பல முறை கேலிகளையும் அனுபவித்தவன் நம் ரமணி. சிட்னிக்கு வந்து ஒரு சில நாட்களே ஆன இவனுக்கு இன்று தான் சிட்னியின் இதயத்துடிப்பான ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. போன மாத இறுதி வரை சென்னை புறநகர் ரயிலில் "சீசன் பாஸ்வாங்கி பயணித்த நம் நடுத்தர நட்சத்திரத்துக்கு தானியங்கி கதவுகள் கொண்ட ரயில் பெட்டிகள் கொஞ்சம் புதிது தான். இருப்பினும் உலகளாவிய உணர்ச்சியான ஜன்னல் சீட்டு இவனை பின்னி இழுத்தது. ஏராளமான காற்றை அள்ளித்தரும் "திறந்தவெளி" ஜன்னல்கள் சிட்னி ரயில்களில் இல்லாதது ஏமாற்றம் தான்.
சென்னை நகர நெரிசலில் காற்றுக்கூட சற்றே கஞ்சத்தனம் பார்க்கும், தீப்பெட்டி போன்ற வீட்டில் வாழ்பவனுக்கு, சென்னை ரயிலின் ஜன்னல் காற்று தான் "ஓசி ஏசி". ஆனால் இந்த சிட்னி ரயில்களில் பெரிய ஜன்னல்களின் கண்ணாடி, காற்றை கட்டி போட்டதை இனி நீளப்போகும் இவனது அயல்நாட்டு வாழ்க்கையின் பானைசோற்று பருக்கையாக நினைத்து பயந்தான்.   
ஒரு வழியாக இடம் கிடைத்து உட்கார்ந்த ரமணியை அடுத்த அதிர்ச்சி அகஸ்மாத்தாய் அழைத்தது. இதுவரை காலி சீட்டுக்காக ஒருவரை ஒருவர்   முன்னும் பின்னும் தள்ளியதை பார்த்தவனுக்கு , இங்கு காலி சீட்டையே முன்னும் பின்னும் ஒரு சீன பெரும் மூதாட்டி தள்ளியது வியப்பாய்  இருந்தது. ரயில் போகும் திசைக்கேற்ப இருக்கைகளை சரி செய்து கொள்ளும் வசதி ரமணியை "இம்ப்ரெஸ்" செய்ய தவறவில்லை.
எதிர் திசையில் அமர்ந்தால் வாந்தி வரும் என்ற எலுமிச்சை பிரஜைகளுக்கு இங்கு "ஸ்கோப்பே இல்லை.
காலை உணவை கண்டுகொள்ளாமல் இருப்பதை "கவர்னர்விருது போல் பாவிக்கும் மனப்பாங்கு உள்ள இந்திய இளைஞர் கூட்டத்தின்  பிரதிநிதியான ரமணி ரயிலில் கிடைக்கும் வடை, சுண்டல், கொய்யாக்காயை எதிர்பார்த்த ஏமாற்றத்திற்கு "இறை" ஆனான்.  பள்ளிக்கூடத்தின் பாட புத்தகங்களை அலங்கரித்த "பிரவுன் சீட் சிட்னியில் உணவுப்பையாய் உருமாறி பலர் கையில் உலா வருவதை பார்த்தவுடன் மனதிற்குள் கேட்டது டேய் டப்பால வெச்சிருக்க இட்லிய  கொண்டுபோக மறந்துடாத என்னும் அம்மாவின் குரல்
இப்படி தொடர் ஏமாற்றங்களை சந்தித்த ரமணிக்கு ஒரே ஆறுதல் ரயில்  பெட்டியின் "ஏசி காற்று .
சுற்றி சுற்றிபார்த்த அவனுக்கு, "பிரீ சீசன் பாஸ்" கொண்டு, ரயில்வே ஊழியர் அடையாள அட்டையை , பாரத நாட்டின் உயரிய விருதான "பாரத் ரத்னா" போல் சட்டை பையில் மாட்டி இருக்கும் நடுத்தர வயதுமிக்க  பெரியவர் கண்ணில் படவே இல்லை
கழுத்தில் உள்ள "பட்டையை" பார்த்தே, தம்பி நீங்க "ஐ.டி" யா என்று கேட்கும் அந்த "தொழிற்பேட்டையின்" உழைப்பாளியின் குரலையும்  கேட்கே முடியவில்லை  
ஒருவருடன் ஒருவர் பேசினால் வகுப்பு கரும்பலகையில் தங்கள் பெயர்  வந்து விடுமோ என்ற பயத்தில் இருப்பது போல் அமர்ந்து இருந்த சக பிரயாணிகள் சலிப்பை அளித்தனர் ரமணிக்கு.  
"ஓவர் நயிட்" சார்ஜ் செய்யப்படும் மொபைல் போன்கள் போல், ஒயர்களை தங்கள் காதுகளில் பொருத்தி இசையால் தங்களை சார்ஜ் செய்து கொண்டு இருந்தது பொது ஜனம். சமரசம் உலவும் இடமாய் மாறிப்போன  சென்னை ரயில்களில் பிராயணித்தவனுக்கு, சிட்னி ரயிலின் "நிசப்தம்" ரொம்பவே "சத்தமாக" இருந்தது.
ஜீ, இன்ஸ்டா ரெம்-ல நேத்து ஒரு டாலர் “51.42” க்கு போச்சு" என்ற காற்றினில் வந்த தமிழோசை ரமணியை தாய்ப்பால் போல் தெம்பூட்டியது. தலை தூக்கி பார்த்தல் ஒரு பச்சை தமிழன் கொச்சை தமிழில் "ஆப்பிள்"-லில் பேசி கொண்டு இருந்தான்.
"பிரசவ வார்டின்" கணவன் போல் அந்த தமிழ் நெஞ்சம் பேசிமுடிக்கும் வரை காத்திருந்தான் ரமணி. அவர் போனை உள்ளே வைத்ததும் நீங்க தமிழா? என்றான் ரமணி (ஒரு சக தமிழனை பார்த்து நீங்க தமிழா என்று கேட்க்கும் "சுகானுபவத்தை" ஒரு தமிழனே அறிவான்). அதற்கோ அவர் நீங்க பி ஆரா ? (P.R) என கேட்டார்
பிரிவினைகளை மறந்த நமக்கு, ஆஸ்திரேலியாவில் பி ஆர் (P.R) அதாவது பெர்மனெண்ட் ரெசிடெண்ட் என சொல்லப்படும் "நிரந்தர வாசி" மற்றும் "ஒர்க் பெர்மிட்டில்வேலை செய்யும் "நிதம் தரும் வாசி" என்ற பிரிவினை தாய்நாட்டில் இருப்பது போன்ற தாக்கத்தை அளித்தது.
"ஓ இந்த வம்பே வேணாம்னு தான் ரயிலில் யாரும் பேசிக்கொள்வது இல்லையோ என்று நினைத்து "நான் பி ஆர் இல்லைங்க" என்று சொல்ல, அதற்கடுத்து அவர் பேசிய சுய விளம்பரம் தாளாமல் இவன் சற்றே விலகி சரிங்க பாப்போம் என்று சுருக்கமாய் முடித்து கொண்டான்
மறுபடியும் தன் சீட்க்கு போய் செட்டில் ஆனான், (இது ஒரு வசதி இந்த நாட்டில் ரயிலில் எப்பவுமே உட்கார சீட் கிடைத்து விடுகிறது!!)
சிறுது நிமிடம் கழித்து " குட் டே மேட் !! " என்றது ஒரு கனீர் குரல் !! யாருடா இது இவரு யாருனே நமக்கு தெரியாது நம்மள பாத்து விஷ் பன்றாரே என்று வியந்தான் ரமணி !! இருப்பினும் தமிழனின் எஞ்சிபோன விருந்தோம்பல் பண்புகளில் மற்றவரை மதித்து வணக்கம் வைக்கும் பழக்கம் இன்னும் இவனிடம் இருப்பதால்ஹாய்என்றான்
அந்த உள்ளூர் பிரஜையும் ரமணியிடன் பல்வேறு விஷயங்களை பற்றி விவாதித்தார். வியப்பாக இருந்தது அவனுக்கு. அவர் விடை பெற்று சென்றவுடன் ரயிலின் திறக்காத ஜன்னல் நோக்கி யோசித்தான், வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் போலத்தான் இங்கே அந்நியர்கள் நம்மவர் ஆவதும் நம்மவர் அந்நியர் ஆவதும் அவர் அவர் நடப்பதை பொறுத்ததே !!
அப்போது ரயிலின் குரல் ஒலித்தது "தி நெக்ஸ்ட் ஸ்டேஷன் இஸ் சென்ட்ரல்"

எழுத்து
நெ செ

No comments:

Post a Comment