Wednesday 25 March 2020

சிட்னிக்கு நேரமாச்சு !!





சிட்னிக்கு நேரமாச்சு !!


கம்பெனி செலவுலயே சிட்னிக்கு ஹனி-மூன் போற..... என்று உடன் வேலைசெய்யும் திலிப் கிண்டலாக சொல்ல, பாஷை புரியாதவன் போல் , வேக வேகமாக கணினியை தட்டிக்கொண்டு இருந்தான் நம் கதையின் நாயகன் பாலு.
சற்றும் மனம் தளராத திலீப் , “பாலு இப்போ எல்லாம் மதுரையே சிட்னியா மாறபோதுன்னு சொல்றாங்க .. நீ என்னடானா சிட்னிக்கு போறியேஎன்றான்
அதற்கோ பாலு – டேய் ராஜு.. சாரி ராஜா , மதுரை சிட்னி ஆகுறதுக்குள்ள நான் சிட்னி போய்ட்டு வந்துடுவேன் டா ..என்று நக்கலாய் சொன்னான் (என்ன இருந்தாலும் நம்மை ஆள்பவர்கள் மீது இவனுக்கு இருக்கும் அசரா நம்பிக்கையை நாம் பாராட்டத்தான் வேண்டும் )

ஐடி கம்பெனியில் வாழ்பவர்களுக்கு (வாழ்பவர்கள் தான், ஏன்னா இவங்க எப்போதாவது தான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கே போவாங்க !! ) இவர்களுக்கு ஒரே லட்சியம், கனவு ..Onsite” - Onsite என்றால் இங்கிருக்கும் அதே வேலையை வெளிநாடு போய் பார்ப்பது. இவர்களை சொல்லியும் தவறில்லை .. "திரைகடல் சென்றால் திருமணம் உண்டாம்" என்பதுதானே புது மொழி !

வெளிநாட்டு வேலையில் பெரிய வித்தியாசம் - லட்சங்களில் சம்பளம் .. அதற்கான விலை.. - சம்பளத்தை தவிர வாழ்க்கையில் மற்ற அனைத்தும்.
இதற்கிடையில் பாலுவின் அலைபேசி அலற.. சுளுக்கு பிடித்த தலை போல் ஒரு பக்கமாக சாய்த்து அலைபேசியில் .. "சொல்லுடா செல்லம்" என்று கொஞ்சலானான் .. இன்னைக்குள்ள டிக்கெட்ஸ்லாம் வந்துடும் னு நினைக்கிறன்.. பேக்கிங்-லாம் பண்ணியாச்சுல என்று சொல்லி...சத்தம் இல்லாத முத்தம் தந்து பேசி முடித்தான்.

இதை பார்த்த (கேட்ட) திலிப் உடனே, இந்த புதுசா கல்யாணம் ஆனவங்க தொல்லை தாங்க முடியல டா என்று நக்கலடிக்க . பாலு உடனே .. டேய் நாங்க எல்லாம் பேமிலி டா ..என்று சொல்லி புன்னகைத்தான்
மச்சி உனக்கு ஆம்லெட் தியரி தெரியுமா என்று திலீப் கேட்க, அதற்கு பாலுவோ தெரியாது என மண்டை ஆட்ட.. இது கல்யாணம் பத்தின ஒரு Theory டா  என்று மேலும் பேச தொடங்கினான் திலீப்

பொண்டாட்டி போடுற ஆம்லெட்ல நல்ல வறுத்த வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு ஜம்முனு இருந்தா, அவங்களுக்கு கல்யாணம் ஆகி 1 வருஷம் கூட ஆகல-னு அர்த்தம் . அதுவே வறுக்காத வெங்காயத்தை ஆம்லெட்ல போட்ட 3 வருஷம் முடிஞ்சிருக்குனு அர்த்தம்.. இதுவே வெங்காயம் மிஸ் ஆயி பெப்பர் மட்டும் இருந்த 5 வருஷத்தை தாண்டிட்டாங்கனு அர்த்தம் ..

பாலு திலீப்பை பார்த்து.. இவ்ளோ சொல்றியே அப்போ உங்க வீட்ல எப்படி மச்சி என்று கேட்க அதற்கு திலிப், “எங்க வீட்ல ஒம்லெட்ல முட்டையே மிஸ்ஸிங் மச்சி. என்று கண்கலங்க சொல்ல., பாலு கொல் என்று  சிரித்தான் .. மனதிற்குள் மைன்ட் வாய்ஸ் .. " பேசாம சைவமா மாறிடு பாலு" என்றது ...
மறுநாள் டிக்கெட் வந்த சந்தோஷத்தில் பாலுவின் மனைவி காயத்ரியும் , "தன"பாலுவாக மாறவிருக்கும் களிப்பில் பாலுவும் திளைக்க , உற்றார் உறவினர் புடைசூழ்ந்து சென்னை விமான நிலையம் வந்து வழியனுப்ப அடுத்த நாளே சிட்னிக்கு புறப்பட்டனர்.
விமானத்தில் ஏறியவுடன் ஏசி காற்றுக்கு காயத்ரியும் ஏர் ஹோஸ்டஸ் வருகைக்காக பாலுவும் அலைமோத .. மேக அலைகளில் போதையுற்ற விமானம் மெதுவாக தள்ளாடியது. "Safety Announcement” சொல்லும்போதே கவனிக்காம விட்டுட்டோமே என்று அஞ்சிய பாலுவின் வியர்வை சட்டை வழியே பேண்டை பதம் பார்க்கும் முன், விமானம் தன் ஆட்டத்தை நிறுத்தி கொண்டது.
அருகிலே இருந்த காயத்ரி "ஐ நீட் சம் Space” என்று கேட்க .. பாலுவோ , கல்யாணம் ஆகி 2 மாசத்துல உனக்கு எவ்ளோ சுதந்திரம் குடுத்திருக்கேன் அப்படி இருந்தும் என்னை பாத்து Space வேணும்னு கேக்குறியே. மத்த வீட்ல எல்லாம் போயி பாரு.. உனக்கு புரியும் என்றான் (பாவம் அம்பலம் ஆடும் நடராஜரை போல் சம்பளம் வாங்கி ஆடிய விமானத்தின் தாக்கம் இவனை விட்டு இன்னும் போகவில்லை). அதற்கு காயத்ரி, லூசா பா நீ !! Flight-ல லெக் space பத்தலைனு சீட் மாறி உக்கார சொன்னா, பயபுள்ள எப்படி எல்லாம் பேசுற என்று முகத்தை திருப்பி அமர்ந்தாள்
பின்பு இவர்களை விமான பணிப்பெண் கொண்டு வந்த உணவு பொட்டலம் ஒன்று சேர்த்தது .. "அலுமினிய" காகிதத்தில் மூடப்பட்ட உணவை "இரும்பு" இதயம் கொண்டு சுவைத்தனர் இந்த தம்பதிகள் .. ருசித்திவிட்டு கொஞ்சம் பெட்டெரா இருந்து இருக்கலாம் என்று முணுமுணுத்தனர்.  (இன்டர்நேஷனல் விமானத்தில் கூட இட்லி கேட்கும் நம்மவர்களுக்கு இந்த உணவு பிடிக்காமல் போனதில் ஆச்சர்யம் இல்லை)
மலேசியாவில் தரை இறங்கி மூன்று மணி நேரம் காத்திருந்து , சிட்னி விமானத்தில் ஜன்னல் ஒர இருக்கையில் உறங்கியபடி ஒரு வழியாக சிட்னி வந்து சேர்ந்தனர் திரு மற்றும் திருமதி பாலு.
நாடு கடத்தப்பட்ட ஊறுகாய் மற்றும் பருப்பொடிகளை இம்மிகிரேஷன் ஆஃபீஸ்ர்கள் கண்ணில் மிளகாய் தூவிவிட்டு வெளியே எடுத்துவந்தனர்.
ஏர்போர்ட் நுழைந்த இவர்களுக்கு இந்த ஊரின் மொழி , உடை , மக்கள் என அனைத்தும் அந்நியமாக இருந்தது . நேற்று வரை பொது இடங்களில் எரிச்சல் மூட்டிய சக இந்தியன் இங்கே மகிழ்ச்சியை அளித்தான்.
பிலைட்ல சாப்பாடு செம்ம மொக்க, இப்போ சாப்பிட ஏதாவது வாங்கணும்.. Preferably இந்தியன் என்று காயத்ரி சொன்னதும்.. முன் வரிசையில் நின்ற சர்தார்ஜி டீ-ஷர்ட்டில் இருந்த "YOU CAN TAKE AN INDIAN OUT OF INDIA BUT NOT INDIA OUT OF AN INDIAN” என்ற வாசகமும் கன கச்சிதமாக பொருந்தியது
கடைசிவரை இந்திய உணவு கிடைக்காத இவர்களுக்கு "ஆபத்பாந்தவனாக" வந்து அமைந்தது மெக்டொனால்ட்.... அங்குள்ள பர்கரை உண்டனர் (பர்கர் கூட இன்னும் சில நாட்களில் இந்திய உணவு பட்டியலில் இடம் பிடித்தால் ஆச்சர்யம் இல்லை)
பசியாறியவுடன் .. வீட்டாருக்கு தாம் சிட்னி வந்து சேர்ந்ததை தெரிவிக்க ஒரே வழி "ஏர்போர்ட் Free Wi-fi". “Free” என்றால் ஓட்டுக்களை கூட மாற்றிப்போடும் நமக்கு Wi-Fi மட்டும் என்ன விதிவிலக்கா?   ஒரு வழியாக வீட்டாருக்கு தகவல் சொல்லிவிட்டு உள்ளூர் சிம் கார்டு தேடுதல் பயணம் தொடங்கியது 
சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்; தேடுதல் தான் வாழ்க்கை என்று
இந்திய பாஸ்போர்ட் காண்பித்து ஆஸ்திரேலியா சிம் கார்டு வாங்கியாகிவிட்டது .. பாவம் அந்த பாஸ்ப்போர்ட்க்கு அப்போது தெரியாது , சொந்த ஊரில் "மூலவராய்" இரும்பு பெட்டியை அலங்கரித்த நிலை மாறி வந்த ஊரில் "உற்சவராய்" உலவும் நிலை வருமென்று ..

இந்நிலை பாஸ்ப்போர்ட்டை வைத்திருப்பவர்களுக்கு தான்

முற்றும்

எழுத்து 

நெ செ 

No comments:

Post a Comment