Wednesday, 25 March 2020

செய்திகள் வாசிப்பது !!
செய்திகள் வாசிப்பது !!


வணக்கம் செய்திகள் வாசிப்பது, பிரபாகரன் !! என்று உரக்க முணுமுணுத்தது தான் தாமதம் , "நீ எல்லாம் திருந்தவேமாட்டியா ? தூக்கத்துல கூடவா நியூஸ் வாசிக்கிற மாதிரி உளறுவ ? என்று அவனை நோக்கி பாய்ந்தது அன்னையின் தோட்டா !! பிரபாகரனுக்கு செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்பது தான் சிறுவயது கனவு. அதனால் தான் என்னமோ இன்னும் கனவுகளில் மட்டுமே செய்திகள் வாசித்தது கொண்டு இருக்கிறான்
ஐடி வேலைக்கு போக வேண்டும் என்பது தான் சராசரி குடிமகனின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை பக்கத்து வீட்டு நைட்டிபோட்ட அம்மணி அறிவுரையாக சொல்லும் வரை வந்துவிட்டது பிரபாகரனின் நிலைமை. சரி விடுங்கள் என்ன செய்வது லட்சங்களின் பின் ஓடுபவர்கள் மத்தியில் லட்சியத்தின் பின் ஓடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
அம்மாவின் வசை கேட்டு தூக்கம் களைந்து எழுவதற்குள் , தகப்பன் சாமி தன் பங்குக்கு அர்ச்சனைகளை அள்ளி தெளித்தார். "இவன்லாம் முன்னேறுவாங்கிற நம்பிக்கை எனக்கு இவன் மேல சின்ன வயசுல இருந்தே இல்ல . டிவி-ல சினிமா நடுவுல நியூஸ் வந்தா எல்லா குழந்தையும் எழுந்து விளையாட போயிடும் , இவன் மட்டும் தான் டிவி கிட்ட போயி உக்காந்துப்பான்
இதை கேட்டவுடன் தன் குழந்தை பருவ நினைவுகளை மெல்ல அசைபோட்டேன் பிரபா!! ஐந்தாம் வகுப்பு தமிழ் பீரியடில் , “எல்லாரும் வருங்காலத்துல என்ன ஆகா போறீங்க ?” என்று சரோஜா டீச்சர்  கேட்டதற்கு , நான் நிஜந்தன் மாதிரி நியூஸ் ரீடர் ஆகப்போறேன் என்று சொன்னவன் பிரபா . சுற்றி இருந்த மாணவர்கள் விண்ணில் இறங்கி வந்த மனிதனை போல் பார்த்தனர் இவனை. சொல்வதறியாத சரோஜா டீச்சரும், “சரி உக்காரு என்றார். பிரபாவுக்கு மட்டும் அல்ல , இவனை போன்ற லட்சியவாதிகளுக்கு இன்னும் இப்படி பட்ட நிலை தான். எங்க விட்டா இவங்களை எல்லாம் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கும் உண்டு
ஒரு வழியாக நித்திரை கலைந்தவன் சித்திரை நிலவு போல் மலர்ந்தான். காலை 8 மணி செய்தியின் தொடக்க இசை கேட்டதும் , டீவியை சத்தமாக வைத்து "புதிய தமிழகம்" செய்தியாளரை ரசித்தான். "காலா" படத்தில் ரஜினியின் தொடக்க காட்சியையே கூட இவன் இப்படி ரசித்ததில்லை. வாசிப்பாளர் சொல்லும் ஒரு சில வார்த்தைகளை மனதுக்குள் சொல்லிச்சொல்லி சுவைத்தான் தேன் மிட்டாய் போல்
செய்திகள் முடிந்ததும்செல்பிவீடியோ வில் இன்றைய செய்திகளை வாசித்து பதிவு செய்தான் பிரபா. நித்தம் பல் துலக்குவது போல் இது இவனின் தினசரி வாடிக்கை
BA (ஜௌர்னலிசம்) படித்திவிட்டு, செய்தி வாசிப்பாளர் வேலைக்குத்தான் போவேன் என்று அடம் பிடித்து வீட்டிலியே அமர்ந்திருக்கிறான் 3 வருடங்களாக. சேலை இல்லா பெண்ணை விட வேலை இல்லா ஆண், சமுதாய பார்வையில் மிகவும் மோசமாக காணப்படுகிறான்
இவன் தினசரி வேலை அம்மாவுக்கு காய்கறி வாங்கி தருவது, வீட்டு வேலைகளில் உதவி செய்வது, அத்தோடு நில்லாமல் அப்பாவின் பையிக்கை துடைப்பது, மாதாந்திர வீட்டு கணக்கு மற்றும் தஸ்தாவேஜுகளை சரி பார்ப்பது. எனக்கு என்னமோ அலுவலகத்தில் வேலை பார்ப்பவனை விட இவன்தான் நிறைய வேலை செய்கிறான் என்று தோன்றுகிறது (அலுவலகத்தில் வேலை செய்தால் வாரம் 2 நாட்கள் விடுமுறையாவது கிடைக்கும்)
அதன் படியே இன்றும் காய்கறி வாங்க "பழமுதிர்சோலை" சென்றபோது "முன்னாள் செய்தி வாசிப்பாளர் " திருமதி ஷோபனா ரவியை "தரிசிக்கும்" வாய்ப்பு கிட்டியது.
மணியே இல்லாத தன் பர்சில் இருந்த ஒரு விசிட்டிங் கார்டின் பின்புறத்தை திருப்பி அதில் ஷோபனாவிடம் ஆட்டோகிராப் கேட்டான் - பேச வார்த்தைகள் இன்றி
திருப்பதி வெங்கடாசலபதியின் நொடி நேர தரிசனத்தை காட்டிலும் மேலாக நினைத்தான் இந்த சந்திப்பை !!
ஷோபனா ரவியும் திகைப்புடனும், புன்னகையுடனும் ஆட்டோகிராப் போட்டு ,  "ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லி விரைந்தார் பாம்பின் கால் பாம்பே அறியும்
திரும்பி வரும் வழியில் உச்சகட்ட மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்தான் பிரபா. ஆடுகளம்தனுஷைபோல் லுங்கியை தூக்கி ஆடாதது ஒன்று தான் குறை. இல்லம் திரும்பி இந்த செய்தியை தன் தாயிடம் சொல்லி மகிழ்ந்தான். என்னதான் தீட்டினாலும், மகனின் சிரிப்பை விட மகிழ்ச்சி தாய்க்கு வேறு எதுவும் இருந்து விட முடியாதல்லவா

10 நாட்கள் கழித்து அத்தி பூத்தார் போல் "சன் செய்திகளில்" செய்தி வாசிக்க நேர்காணல் அழைப்பு வந்தது பிரபாவிற்கு. பல வருடம் கழித்து கருவுற்ற தாயின் மனநிலை தான் இவனுக்கும். +2  பரீட்சைக்கு படிப்பது போல் இரவு பகல் தயார் செய்தான். ஊரில் இருக்கும் அனைவருக்கும் சொல்லிவிட்டான் இந்த நற்செய்தியை.
இறுதியாக அந்த நேர் கானல் நாளும் வந்தது. 4 மணிக்கே அலாரம் இல்லாமல் எழுந்தான். காலை கடனை முடித்துவிட்டு , பரீட்சை அறை வெராண்டாவின்கடைசி நொடி பயிற்சியாக , டிவியில் சன் செய்திகளை பார்த்துவிட்டு . இரவல் பைக்கில் ஏறி, கனவுகளை தன் பின்னால் ஏற்றி, "வெற்றி நிச்சயம்" என்ற அண்ணாமலை திரைப்பட பாடலை தன் ஹெட் போனில் லூப் மோடில் கேட்டபடி பயணித்தான்.
கற்பனை குதிரையின் வேகத்தில் பைக்கை செலுத்தியதால் , எதிர் பாராத விதமாக பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நாட்டுப்புற கல்லில் தலை மோதியது. தலைக்கவசம் அணிந்திருந்தும் கழுத்தில் காயமுற்று ரத்த வெள்ளத்தில் மிதந்தான்
"ICU" வின் பீப் சத்தம் இனம் புரியா பயத்தை தந்தது பிரபாவின் பெற்றோருக்கு !! உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை , ஆனால் கழுத்தில் பலமா அடிபட்டதால, Vocal Chord ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சு. இனிமே இவரால் பேச முடியாது" என்ற டாக்டரின் சொற்கள் ஆயிரம் தோட்டாக்களை மார்பில் தாங்கிய வலியை தந்தது. இதை ஜீரணிக்க முடியாமல் தவித்தான் பிரபா. கொஞ்சம் கொஞ்சமாய் உடலில் பட்ட காயங்கள் மட்டும் குணமடைந்தது.. உயிர் மட்டும் எஞ்சிய உடலாய் இருந்தான்,  பிரபா
இனிமேல் உன் கனவுகளை மூட்டை கட்டி விட வேண்டுமா? “என்று அவன் ஆழ் மனம் அவனை சத்தமாய் கேள்வி கேட்டது. என்ன செய்ய அதற்கு பதில் கூற குரல் இல்லை !!
விரக்தியின் விளிம்பில் நின்ற பிரபாகரன் , அழ தண்ணீர் இன்றி கோடை கால சென்னை போல ஆனான்.
ஒரு நாள் மொட்டை மாடி கட்டை சுவற்றில் ஏறி நின்றான். இந்த வாழ்கை அர்த்தம் இல்லாமல் ஆகிவிட்டதோ என்ற பயத்துடன் கீழே பார்த்தான் 4 மாடிகளின் பள்ளம். கண்களை மூடினான்."வணக்கம் செய்திகள் வாசிப்பது" என்று வழக்கம் போல டிவி செய்திகள் அலறியது. பிரபாவின் அம்மாவும் அப்பாவும் உடனே டிவி யின் அருகில் சென்று அமர்ந்தனர். அன்று செய்திகள் வசிப்பது நம் பிரபா-விற்கு மிகவும் பிடித்த ஒரு பெண் வாசிப்பாளர். சற்றே இவர்கள் கண்கள் டிவி யின் வலது மேல் முனைக்கு திரும்பியது !! அந்த திரையில் பிரபா தன் கைகளை அசைத்து சமிஞை மொழியில் செய்திகளை வாசித்து கொண்டு இருந்தான்.
ஆம் பிரபாகரன் இப்போது ஒரு சமிஞை மொழி செய்தி வாசிப்பாளர் !!  குரல் போனாலும் அவன் குணம் மாறவில்லை. அவன் அறையில் உள்ள "வெறும் கை என்றால் அது முட்டாள்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற வாக்கியம் மீண்டு பலித்தது
சமிஞை மொழி செய்திகள் வாசித்து இன்று சாதனை படைத்துவிட்டான் பிரபாகரன்.
அது சரி இந்த பெயருக்கு போராட்டங்களும் , சாதனைகளும் புதிதில்லையே !!

When the going gets tough, the tough gets going!!

மூலக்கதை  - சீனுவாசன்
தொகுப்பு - நெ செ

****மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு அகலாத எங்கள் நண்பன் சீனிவாசனின் மூலக்கதையை சிறுகதை வடிவில் உருப்பெற செய்தமைக்கு இறைவனுக்கு நன்றிகள்***

No comments:

Post a Comment