Wednesday, 25 March 2020

காலணி காதலி !!

காலணி காதலி !!


இன் இந்தியா மை ஷூ சைஸ் இஸ் 8” என்று சொன்னபடியே தனக்கு பிடித்தமான ஷூ ஒன்றை காண்பித்து இதில் அவன் கால்களுக்கு ஏற்ற சைஸ் இருக்கிறதா என்று வினவியபடியே அந்த கடையில் வேலை செய்யும் பெண்ணின் முகத்தை பார்த்தான் சீனு. வாட் எ வெள்ளைஎன்று வார்த்தையிலும் வர்ணிக்க முடியாத ஒரு அழகு அவள் முகம்... நிலவு வெண்மை நிறம் தான், இருந்தாலும் நீங்க அநியாயத்துக்கு வெள்ளை-ங்க என்று முணுமுணுப்பதாக நினைத்துக்கொண்டு வாய் விட்டே சொல்லிவிட்டான் இந்த அப்பாவி பயல். ஆஸ்திரேலியா வந்ததும் வராததுமா இப்படி ஒரு பொண்ணை பார்த்துட்டோமே என்று தன் அதிர்ஷ்டத்தை கண்டு வியந்தான்.
அந்த வெள்ளைக்கார...வெண்ணிலா .. இவனை பார்த்து சாரி என்று சமிஞை மூலம் இவன் சொன்னது புரியவில்லை என்றாள்.. நம்ம ஊருல ஒரு செருப்பு பக்கத்துல இருந்தாலே செம்ம அடி விழும் இதுல நாம செருப்பு கடைல வேற இருக்கோம்.. அதுனால ஜாக்கிரதையா பேசணும் என்று நினைத்து கொண்டு மெல்ல வாயை திறந்து பேச முற்பட்டான். அதற்குள் அவள், பாவம் இவனுக்கு ஆங்கிலம் தெரியாது போலும் என்று நினைத்து பரிதாபப்பட்டு சமிஞை மொழியில் எப்படிப்பட்ட காலணி வேண்டும் என்று வினவினாள் .. ஆனால் அது இவனுக்கு மட்டும் அல்ட்ரா ஸ்லோ மோஷனில் தெரிந்தது ... ஸ்லோ மோஷன் கேமரா வருவதற்கு முன்னரே கண்களை கேமெராவாக மாற்றி படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர் நம் காளையர்கள். எந்த மாடல் பிடித்து இருக்கிறது என்று அவள் கேட்க .. உன்னை போல ஒரு மாடல் உலகில் உண்ட என்று மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டே.. பிடித்த காலணி என்று ஒன்றை இவன் காண்பிக்க.. உடனே அவள் தன் வாயை மூடி சட்டென சிரித்தாள்.. இவன் போறாத வேளை இவன் சுட்டி காட்டியது பெண்கள் அணியும் ஹீல்ஸ் செருப்பாக அமைந்தது !!
இருப்பினும் இவள் புன்னகை , முத்துக்கள் வெளியே வராமல் தடுக்க சிப்பியை சட்டென மூடியது போல இருந்தது
பொதுவாக நம் ஊரில் சுண்டினால் ரத்தம் வரும் என்பார்கள் இவளுக்கோ சுண்டணும்னு நெனச்சாலே ரத்தம் வரும் போல அந்த அளவுக்கு சிவப்பழகு. காலணி தேடி வந்தவனுக்கு ஒரு வேளை காதலி கிடைத்துவிடுமோ என்று நினைத்து மகிழ்ந்தான். இதற்கிடையில் நம்முடைய அழகிய தமிழ் மகனுக்கு நாணம் நயாகரா போல் வழிந்ததால், மேலே எதுவும் பேசாமல் .. தேங் யூ சொல்லி நகர்ந்தான்.. வீடு வரை இளையராஜா காதுகளில் ஒளிந்துகொண்டு இருந்தார், ஹெட் போன் இல்லாமல் ....(இதற்கு அவர் ராயல்டி கேட்க மாட்டார் என்று நம்புவோமாக !!)
 மறுநாள் காலை  - குட் டே மேட் !! (ஆஸ்திரேலியாவின் வழக்குச்சொல்) கிட்சன் ஷெல்ப்ல பாருடா ரெடி டு ஈட்உப்புமா இருக்கும் அத மைக்ரோ-வேவ்ல வெச்சு சூடு பண்ணு என்று இவன் ரூம் மேட் சொல்ல.. அம்மாவின் உப்புமாவை தட்டுடன் பறக்க செய்த பாவம் தன்னை பின் தொடர்ந்து வந்ததை எண்ணி, மெல்ல மைக்ரோ-வேவ் நோக்கி நகர்ந்தான்.
முதல் நாள் அலுவலகம் செல்ல பேருந்து ஏறி ஒப்பல் கார்டை தட்டி சீட் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறி அமர்ந்தான். பக்கத்துக்கு சீட்டில் நம் காலணி காதலி அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ந்தான். இதெல்லாம் தெய்வ செயல் தான் ல என்று மனதுக்குள் நினைத்தான் .. (அது என்னமோ தெரியவில்லை நம்மவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றார் போல் தெய்வத்தை நாடுகிறார்கள்) என்னமோ திருமணமே முடிந்துவிட்டது போல் எண்ணி கற்பனை குதிரையை ஓட விட்டான் அதில் கண்கவர் பாடல்கள் பாடி விட்டான்.. நான்கு ஸ்டாப்புகள் தாண்டும் முன் இவன் நான்-ஸ்டாப் காதலில் மூழ்கினான்.
இவர்கள் இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள .. நாளடைவில் நட்பு மலர்ந்து ஸ்டார் பக்ஸ் காபி வரை வளர்ந்தது. மேலும் சற்று நகர்ந்து காதலானது. இதற்கிடையில் இவர்கள் ஓபரா அவுஸை” 7 -முறை சுற்றி வந்துவிட்டார்கள்.. (அதும் ஒப்பல் கார்டின் துணை இன்றி).. கல்யாணம் உங்கள் முறை படி பண்ணலாம் என்று அவள் கேட்க.. இல்லை உங்க முறை படி பண்ணலாம் என்று இவன் சொல்ல.. பெர்மனெண்ட் ரெசிடெண்சிக்கு வழி பண்ணி விட்டோமோ என்ற களிப்பில் மிதந்து .. சின்ன சின்ன சிலிமிஷன்களுடன் சென்ற காதலுக்கு வில்லனாக வந்தான் சீனுவின் ரூம் மேட்.
ஆமாம் கனவை கலைச்சவன் காதலுக்கு எதிரி தானே !! மைக்ரோ வேவில் உப்புமா வைத்து ஒரு மணி நேரம் ஆனது கூட தெரியாமல் உனக்கென்னடா தூக்கம் என்று கூறியபடி எழுப்பினான் இவனை..  கண்டதெல்லாம் கனவு தான் என்று உணர்ந்து கனத்த இதயத்துடன் போனை நோண்டிய படியே கழிவறைக்குள் பயணப்பட்டான். 
பேருந்தும் வந்தது .. அதில் காலணி காதலியும் வந்தாள்
கனவின் முதல் புள்ளி நிறைவேறியது... மீண்டும் அவள் முகத்தை ரசித்து கண்களை கவனித்து பார்த்தான். நேற்று இவள் அழகை முழுவதுமாக கண்டு கழிக்க முடியவில்லை இன்று நல்ல வாய்ப்பு என்று கீழ் நோக்கி நகர்ந்தவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம் !! காலணி காதலி கர்பமாக இருந்தாள்.. முன்தினம் முகத்தை பார்த்தவன் வேறு எதையுமே கவனிக்கவில்லை என்பதை நினைத்து நொந்து .. காதல் கசக்குதய்யா என்ற ஆண் பாவம் திரைப்பட பாடலை தன் ஆப்பிள் ஏர் பாடில் கேட்டுக்கொண்டே கனத்த இதயத்துடன் பயணமானான்
சற்று நிமிடத்திற்குள் சீனுவின் காதுகளில் சத்தமாக வேறு ஒரு பெண் குரல் ஆர் யு நியூ டு சிட்னி என்றது.....இம்முறை கனவில் அல்ல நினைவில்


முற்றும்.
எழுத்து,
நெ செ

No comments:

Post a Comment